ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பிய பில்லூர் அணை ; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
6 August 2022, 10:41 am
Quick Share

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக கேரள மாநிலம் அட்டப்பாடி, முள்ளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா போன்றவையாகும்.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை நீர் வரத்து பெருமளவு அதிகரித்தது.

அதே சமயத்தில், பில்லூர் அணையின் முக்கிய நீர் பிடிப்பான குந்தா மற்றும் கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் காரணமாக, பில்லூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து 14,000 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போதைய நீர் மட்டம் 97 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி, தற்போது அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு, 14,000 கன அடி தண்ணீர் விநாடிக்கு பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. எனவே, ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டாச்சியர் மாலதி, மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அணையின் மொத்த கொள்ளளவான 100அடியில் தற்போது 97அடி வரை தண்ணீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 417

0

0