தட்டிக்கேட்டதால் தர்ம அடி : கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் வெறிச்செயல்!!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 9:14 am
Quick Share

கோவை: கோவையில் அதிக சத்தம் எழுப்பிய ஹார்ன் மாட்டிய தனியார் பேருந்தை தட்டிக்கேட்டதால், அதன் ஓட்டுனர், நடத்துனர்கள் குடிபோதையில் இருந்த இருவரை சரமாரியாக தாக்கி, அருவருத்தக்க வார்த்தைகளால் திட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு தினத்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்திற்குள் வரும் தனியார் பேருந்துகள், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி ஒலி எழுப்புவதால், பயணிகள் சிரமம் அடையும் சூழலில், சில நேரங்களில் இதனால் வாக்குவாதம் ஏற்படும் வாடிக்கையாக மாறிவருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் பேருந்து ஒன்றின் ஓட்டுனர், அதிக ஒலியுடன் கூடிய ஹாரனை ஒலிக்க விட்டுள்ளார்.

அப்போது அங்கு நின்றிருந்த இரு பயணிகள், இப்படி சத்தமாக ஹாரன் அடிக்கலாமா என கேட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கும், பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஓட்டுனரும், நடத்துனர்களும், அவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியபடியே, கடுமையாக தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களை அடிக்க ஓட்டுனருக்கும், நடத்துனர்களுக்கும் யார் அதிகாரம் கொடுத்தது என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. தொடரும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் இத்தகைய அத்துமீறிய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் காவல்துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 949

0

0