‘மெட்ரிக் பள்ளி வேண்டாம்..!’ : மகனை அரசுப் பள்ளியில் சேர்த்த தமிழ் ஆசிரியை..!

25 August 2020, 11:19 am
Govt Teacher Son - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வரும் தமிழ் ஆசிரியை ஒருவர் தனது மகனை மெட்ரிக் பள்ளியில் இருந்து விடுவித்து அரசு பள்ளியில் சேர்த்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின் விக்டோரியா. இவர் கோவை செம்மாண்டாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு ஜெரிக் சாமுவேல் என்ற 11 வயது மகனும், ஏஞ்சலினா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜாஸ்மின் விக்டோரியா கடந்த 7 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மகன் ஜெரிக் சாமுவேல் சோமனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். ஜாஸ்மினுக்கு தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை.

ஆனால், குடும்ப சூழல் காரணமாக அது நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து வந்தது. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாததால் தனியார் பள்ளியிலேயே அவரது மகனை படிக்க வைத்து வந்தார்.

இந்த சூழலில், தனது ஆசையை குடும்பத்திடம் எடுத்துக்கூறிய ஜாஸ்மின் தற்போது அவரது மகனை சோமனூரை அடுத்த ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார்.

இதுகுறித்து ஜாஸ்மின் கூறியதாவது: நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை என்னை நம்பி பல பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை எங்களது பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையாக இருந்து கொண்டு எனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை.

நான் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணி புரிந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், என்னை நம்பி பல பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். இதே போல், நானும் அரசு பள்ளி ஆசிரியர்களை நம்புகிறேன் அதன் பேரிலேயே, எனது மகனை அரசுப்பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டேன்.

ஆனால், எனது மகன் தனியார் பள்ளியில் படிக்க வேண்டுமென்பது எனது குடும்பத்தினரின் ஆசையாக இருந்தது. தற்போது எனது குடும்பத்தினரை சமாதானப்படுத்தி உள்ளேன். அதன்படி, தற்போது எனது மகனை அரசுப்பள்ளியில் சேர்க்க எனது குடும்பத்தினர் ஒத்துழைத்தனர். அதன் பெயரிலேயே தற்போது எனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளேன்.

இனி எனது மகனை அரசு பள்ளியில் தான் படிக்க வைப்பேன். இதேபோல எனது மகளையும் ஆரம்பத்திலிருந்தே அரசுப்பள்ளியில் சேர்ப்பேன். எனது மகனுக்கு தனியார் பள்ளியில் ஆண்டுதோறும் ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கல்விக்கு செலவு செய்யப்பட்டது.

தற்போது அரசு பள்ளியில் சேர்த்ததன் மூலமாக முழுவதுமாக அரசே எனது மகனை படிக்க வைக்கும். எனது இந்த முயற்சியினால் பலரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்.

மற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இந்த தமிழ் ஆசிரியர் தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0