வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து : மேகத்தை சூழ்ந்த கரும்புகை… துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை..!!

4 March 2021, 9:09 pm
Vellalore garbage dump 3- - updatenews360
Quick Share

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள்தோறும் 800 முதல் 1,000 டன் வரையில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

சுமார் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குப்பைக் கிடங்கில் பல லட்சம் மெட்ரிக்டன் அளவிலான தரம்பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இந்தக் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்கும் ரூ.60 கோடி மதிப்பிலான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தக் குப்பை கிடங்கு அமைந்திருக்கும் பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால், சில சமூக விஷமிகள், மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. அப்படி, மது அருந்துபவர்கள் போதையில், குப்பைகளுக்கு தீவைத்து விட்டு செல்கின்றனர். இந்த தீ குப்பைகளில் மளமளவென பிடித்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், வெள்ளலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு விடுகிறது.

இந்த நிலையில், இன்றும் அதேபோல சில சமூக விரோதிகள் குப்பைகளுக்கு தீவைத்துள்ளனர். இதனால், குப்பைகிடங்கில் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் பெரும் அசம்பாவீதம் ஏற்படுவதற்கு முன்னதாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதனிடையே, பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கும், போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 5

0

0