கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:கல்லூரி விடுதி காப்பாளர் கைது: அமமுக பிரமுகர் தலைமறைவு

Author: kavin kumar
19 November 2021, 8:43 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளாளர் கைது செய்யக்கோரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டதையடுத்து கல்லூரி விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவான தாளாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி நடத்தி வருபவர் ஜோதிமுருகன்.இந்தக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.கருப்பன், வேட்டை நாய், அண்ணாத்த உள்ளிட்ட திரைபடங்களில் சிறு வேடங்களில் நடித்த ஜோதிமுருகன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுதோல்வி அடைந்தவர்.மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.அவரது விருப்பத்திற்கு இணங்காத மாணவிகளை, தொடர்ந்து கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் , தாளாளர் விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என சக ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா மூலம் மிரட்டி காரியம் சாதித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது பாலியல் சீண்டல்கள் அதிகரிக்கவே பொறுத்துக்கொள்ள இயலாத மாணவிகள் தங்களது பெற்றோருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இன்று திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கல்லூரிக்கு நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு ஆதரவாக விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சும்மா 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி விடுதியை விட்டு வெளியேறி திண்டுக்கல் பழநி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநிவாசன் மற்றும் வருவாய் துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி மாணவ, மாணவிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தினால் திண்டுக்கல் பழநி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்த போலீஸார் தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை தேடி வருகின்றனர். விடுதிக் காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் தாளாளர் ஜோதி முருகனை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Views: - 325

0

0