சாலையில் செல்லும் கல்லூரி மாணவிகள், பெண்களை செல்போனில் ‘கிளிக்‘ செய்த இளைஞர் : அதிரடியாக இறங்கிய மாணவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2021, 7:37 pm
tirupur Cellphone - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தில் சாலையில் செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை புகைப்படம் எடுத்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ளது என்.ஜீ.ஆர் சாலை. பல்லடத்தின் பிரதான பகுதியான இங்கு தினசரி சந்தை,உழவர் சந்தை,வார சந்தை மற்றும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சாலை வழியாக கல்லூரி மாணவர்கள்,மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர்.என்.ஜீ.ஆர் சாலையில் சுரேஷ் என்பர் கடந்த 16 வருடங்களாக அரிசி கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் அகமது மொய்தீன் என்பவர் கடந்த சில வருடங்களாக பணி புரிந்து வருகிறார். மாணிக்காபுரம் சாலையில் அகமது மொய்தீன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை அரிசி கடையில் நின்று கொண்டிருந்த அகமது மொய்தீன் அந்த வழியாக சென்ற பல்லடம் அரசு கல்லூரியில் பயின்று வரும் சில கல்லூரி மாணவிகளை தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கல்லூரி மாணவிகள் தங்களுடன் வந்த கல்லூரி நண்பர்களிடம் இதனை தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அகமது மொய்தீனிடம் இருந்த செல்போனை கல்லூரி மாணவர்கள் பறித்தனர்.செல்போனில் பார்த்த பொழுது அவ்வழியாக செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டும் இன்றி அரிசி கடைக்கு வந்த பெண்களையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அகமது மொய்தீனை பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அகமது மொய்தீன் கடந்த சில மாதங்களாகவே அவ்வழியாக சென்ற பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் எதற்காக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது,வேறு எங்காவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டானா என்பது குறித்தும் அகமது மொய்தீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடத்தின் மையப்பகுதியான என்.ஜீ.ஆர் சாலையில் பெண்களை புகைப்படம் எடுத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 630

0

0