உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் தொடக்கம்….!!

29 November 2020, 3:40 pm
roja park - updatenews360
Quick Share

ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதோடு, மகிழ்விக்கும் பொருட்டு, மலர் கண்காட்சி, ரோஜா, காய்கறி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.

இதில், ரோஜா கண்காட்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மே மாதம் நடக்கவுள்ள ரோஜா கண்காட்சி மற்றும் கோடை சீசனிற்கு பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்படும். இதனால், மே மாதம் வரை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை காண முடியாது.

இதன் காரணமாக கோடை சீசனுக்கு முன் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் செடிகளை தயார் செய்வதற்காக தற்போது முதல் பாத்தி மற்றும் டெரஸ் பாத்திகளில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு வருகிறது. தற்போது கவாத்து செய்யும் செடிகளில் வரும் பிப்ரவரி மாதம் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். பூங்காவில் உள்ள மற்ற பாத்திகளில் உள்ள செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்படும் நிலையில், இந்த பாத்திகளில் உள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல முடியும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Views: - 13

0

0