5 மாநில தேர்தல் முடிவுக்கு அப்பறம் உங்க வேலையை காமிச்சிட்டீங்க : மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த கம்யூனிஸ்ட் முத்தரசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 4:28 pm
Mutharasan - Updatenews360
Quick Share

தருமபுரி : 5 மாநில தேர்தல் முடிந்தவுடன், டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி மக்கள் ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

வருகிற 28 மற்றும் 29 ந் தேதிகளில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி தருமபுரியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசு வளர்ச்சி பாதையில் செல்வதற்கான முன்னோட்டம் நிதிநிலை அறிக்கையில் தெரிய வருகிறது. அதை வரவேற்பதாக கூறிய அவர், ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கையினால் நாடு மிகவும் கடுமையாக பாதிக்கபடுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் பெரிதளவும் பாதிக்கபட்டுள்ளனர்.

பொது துறை நிறுவனங்கள் கண்மூடிதனமாக தனியார் நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இவைகளை எல்லாம் கண்டித்து வருகிற 28 மற்றம் 29 தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் பெறப்பட்ட 44 சட்டங்களை தற்போதுள்ள ஒன்றிய அரசு 19 சட்டங்களை நீக்கியும், மீதமுள்ள சட்டங்களை 4 தொகுப்பாக பிரித்து வழங்கியுள்ளது. இதை தமிழக அரசு கண்டித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை, தொழிலாளர் நலவாரியம் மூலம், உள்ளே கொண்டு வர, முதல்வருக்கு தெரியாமல், தொழிலாளர் நலவாரிய அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு முதல்வர் சிக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தை உள்ள விடாமல் முதலமைச்சர் தடுக்க வேண்டும்.

மேலும் 5 மாநில தேர்தல் முடிந்தவுடன், டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அதற்காக காத்திருந்து தற்போது விலையை உயர்த்தியுள்ளனர்.

இந்த விலை உயர்வு தங்களுக்கும் 5 மாநில தேர்தலுக்கும் சம்மந்தமில்லை என கூறும் ஒன்றிய அரசு ஏன் தேர்தலுக்கு முன்பே உயர்த்தவில்லை என கேள்வி எழுப்பிய அவர், அதே போல் தற்போது மக்கள் ஏற்கனவே கடும் பொருளாதார பாதிப்பால் பாதிக்கபட்டுள்ள நிலையில் கேஸ் விலையையும் உயர்த்தி இருப்பது ஒன்றிய அரசின் மக்கள் ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என்றும், அது கடும் கண்டனத்திற்குரியது என்றும், இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் இல்லையெனில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்தபடும் என்றார்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு எந்த தொழிலாளர்களுக்கும் இல்லாத வகையில் உயிர், உடமை, தொழில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இவர்கள் காலம் காலமாக தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். இது நீண்ட கால பிரச்சனையாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கபடும் என மோடி கூறினார். ஆனால் ஆட்சி பொருப்பேற்று கடந்த 8 ஆண்டுகளாகியும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தீர்க்கபடவில்லை. இதற்கு ஒன்றிய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக கர்நாடக சட்டமன்றத்தில் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது இரண்டு மாநில மக்களிடையே உள்ள நல்லுறவை கெடுக்கும் வகையில் உள்ளது.

இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு நேர்மையாக செயல்பட வேண்டும். ஆனால் பாஜக அரசு கர்நாடக அரசிற்கு சாதகமாக செயல்படுகிறது. இதற்கு தமிழக சட்டமன்றத்திலும் கண்டன தீர்மாணம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் விருதுநகர் பாலியல் சம்பவத்தை கண்டித்து வருகிற 27-மே தேதி தனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது வரவேற்கதக்கது. ஆனால் ஆணவப் படுகொலை மற்றும் பாலியல் குற்ற சம்பவங்களுக்கு தண்டனை என்பது மூக்கனாங்கயிறு போல தான். ஆனால் இதற்கெல்லாம் தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர பெரும் முயற்சி எடுத்து வருவதாகவும், இந்தியா முழுவதும் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் அப்படிபட்ட சூழ்நிலை நிலவி வருகிறது.

இதை போக்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழக முதல்வர் இன்று துபாய் சென்று அங்குள்ள முதலீட்டாளர்களிடம் கலந்து பேசயுள்ளார். இது வரவேற்றதக்கது என்று கூறினார்.

இப்பேட்டியின் போது மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, நஞ்சப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Views: - 620

0

0