மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த வழக்கு…! 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

23 May 2020, 9:14 pm
High-Court-updatenews360-1
Quick Share

சென்னை: கொரோனாவுக்கு பலியான மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த வழக்கில் 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர் சென்னை நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ். அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்ற போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்வேந்தன், அப்பு, மோகன், ஜெயமணி, ஜெயப்ரதா, ஜெனிதா, மாரியம்மாள், சரஸ்வதி, கிருஷ்ணவேணி, தினேஷ், மஞ்சுளா, பத்மபிரியா ஆகிய 12 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், கொரோனா பாதித்து பலியானவரின் உடலில் இருந்து வைரஸ் பரவும் என்ற வதந்தி காரணமாக மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டி, 12 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கொரோனாவால் பலியானவரின் உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள், வழிமுறைகள் குறித்து அரசு அதிகாரிகள், முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு தெரிவித்திருந்தால், இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மனுதாரர்கள் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது, தலைமறைவாகக் கூடாது, சாட்சிகளை கலைக்க கூடாது என நீதிபதி நிபந்தனைகளை விதித்துள்ளார்.

Leave a Reply