குழந்தையின் பாதுகாப்பை அரசு செய்யத் தவறினாலும் தவறுதான் : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து கேஎஸ் அழகிரி பேச்சு!!

Author: Babu Lakshmanan
18 July 2022, 10:53 am
Quick Share

திண்டுக்கல் : சின்னசேலம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையாக மாற்றி உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு இரவு நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கிரண்பேடி அவர்கள் செயல்பட விடாமல் அழித்தார்கள். இதனால் பாண்டிச்சேரி மக்களுக்கு 5 ஆண்டு காலம் அரிசி கூட கிடைக்கவில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டையும் அப்படி செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுநர் ரவி அவர்களை அனுப்பி உள்ளார்கள். ஆளுநர் ரவி அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்த போது, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அதை வன்மையாக கண்டித்தோம்.

ராணுவம் பின்புலம் உடையவர், புலனாய்வு பின்புலம் உடையவர் தமிழ்நாட்டைப் போன்ற ஜனநாயக அரசுக்கு இவர் ஏற்றவர் அல்ல. அவரை எல்லையில் உள்ள மாகாணங்களில் போடலாம். ஏனென்றால் அங்கு தீவிரவாதம் இருக்கிறது. ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார். ஆனால், மாநில அரசிடம் கலந்து ஆலோசிகாமல் எப்படி செல்கிறார். மாநில உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி செய்ய முடியும்.

பொதுவாக ஆளுநர் உரை என்பதே சட்டமன்றத்தில் எப்படி நடக்கிறது. அமைச்சரவை எழுதிக் கொடுக்கிறதை தான் அவர்கள் பேசுகிறார்கள். அப்படி இருக்கும்போது அவருக்கு சொந்தமா பேசக்கூட அரசியல் சட்டத்தில் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் சுயமரியாதை அரசியல் இருக்கிறது. அவ்வளவு எளிதாக கருத்துக்களை திணிக்க முடியாது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிறுமி மரணம் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணைக்கு பின்பு தான் தெளிவான உண்மை தெரிய வரும். அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று சொல்ல முடியாது. அவர்கள் கோபப்பட்டு உள்ளார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள்.

அவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காவல்துறை இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது மக்கள் கோவப்பட்டு உள்ளார்கள். சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தது தான் தவறு.

பள்ளியை பாதுகாப்பது அவர்களின் கடமை அதை செய்ய அவர்கள் தவறி உள்ளனர். குழந்தையின் பாதுகாப்பை தனியார் துறை செய்ய தவறினாலும் தவறுதான், அரசாங்கம் செய்யத் தவறினாலும் தவறுதான். தனியார் பள்ளி சார்ந்தவர்கள் இதனை அரசியல் ஆக்க கூடாது. குழந்தையின் மரணத்தை மறைத்து விட்டு வேறு கோணத்தில் செல்வது என்பது தவறு, எனக் கூறினார்.

Views: - 484

0

0