நின்றிருந்த லாரியின் பின்னால் மோதிய கண்டெய்னர் லாரி : ஓட்டுநர் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2021, 3:21 pm
திருப்பூர் : நின்றிருந்த லாரியின் பின்னால் கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கண்டெய்னர் லாரியை இயக்கிய ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து முந்திரி லோடு ஏற்றிக்கொண்டு கோவை உக்கடத்தை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அவிநாசி அடுத்து நாம்பாளையம் பிரிவு அருகே சேலம் – கோவை 6 வழிச் சாலையில் செல்லும்போது பழுதானதால் சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து கோவை நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. சாலையின் ஓரமாக நின்றிருந்த முந்திரி லோடு ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (வயது 55) சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் தன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0