தொடர்ந்து கனமழை: கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Author: Udhayakumar Raman
17 October 2021, 11:34 pm
School Open - Updatenews360
Quick Share

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் மழை காரணமாக அணைக்கு அதிக நீர் வருவதால், அணைகளில் இருந்து விநாடிக்கு 25ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மழையால் தோவாளை பகுதியில் இறுதிக்கட்ட அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. குமரி மாவட்டத்தில் மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட ஒருவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்த் அறிவித்து உள்ளார்.

Views: - 393

0

0