பொங்கல் பரிசில் பல்லி : அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பரிசுத் தொகுப்பு : அதிர்ச்சியில் மக்கள்.. அப்செட்டில் தமிழக அரசு!!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2022, 6:14 pm
திருவள்ளூர் : திருத்தணியில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சமையலுக்கு பயன்படும் புளியில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்றாடக் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அதே பகுதியில் சுப்பிரமணியசாமி பண்டகசாலையில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு இந்த நியாய விலை கடை மூலம் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது,
இதில் அதே பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் தனது குடும்பத்திற்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை பெற்றுள்ளார். இதில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியில் செத்துப்போன பல்லி இருந்துள்ளது.
இறந்த நிலையில் கிடந்த பல்லியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நந்தன், ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் சரியான பதில் கூறாமல் யாரிடம் வேண்டுமானாலும் சொல், சத்தம் போட்டால் என்ன செய்வேன் என்று தெரியாது என்று தகாத வார்த்தைகளை பேசியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நந்தன் செய்தியாளர்களிடம் இதனை காண்பித்தார். அரசு தரும் பொங்கல் பரிசு தொகுப்பு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இறந்து கிடந்த பல்லி இருப்பதை தெரியாமல் மக்களுக்கு வழங்குகின்றனர்.
இதை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள், ஊழியர்களின் செயலால் ஏழை மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். ஏற்கனவே பொங்கல் பரிசில் காய்ந்த கரும்புகளை வழங்குவதாகவும், விரைவில் உருகிப் போகும் வெல்லம் வழங்கியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது சமையலுக்கு வழங்கும் புளியில் பல்லி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பொங்கல் பரிசில் ஏழை மக்களை வஞ்சிக்கும் திமுக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மீண்டும் இதுபோல் சம்பவங்கள் அரசின் இலவச பொருட்களை நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் சாமானிய மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
0
0