கோவையில் 14 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 491 பேருக்கு பாதிப்பு
29 August 2020, 9:24 pmகோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
கோவை மத்திய சிறைச்சாலையில் பணியாற்றி வந்த கிளார்க்குக்கு இரண்டு நாள்களுக்கு முன் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் உள்பட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 வயது ஆண் அலுவலக உதவியாளருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றிய 4 அலுவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
தவிர கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 1 பெண் உள்பட 4 பயிற்சி மருத்துவர்கள், 22 வயது ஆண், 37 வயது பெண் மருத்துவப் பணியாளர்கள், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பு, கணபதி மாநகர் காவலர் குடியிருப்புகளை சேர்ந்த 2 ஆண் காவலர்கள் உள்பட 5 காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர பீளமேட்டில் 34 பேர், காந்திபுரத்தில் 13 பேர், ரத்தினபுரியில் 12 பேர், செல்வபுரத்தில் 11 பேர், சௌரிபாளையம்,பொள்ளாச்சியில் தலா 10 பேர், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரத்தில் தலா 9 பேர், மேட்டுப்பாளையத்தில் 7 பேர் உள்பட 491 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனாவால்.பாதிக்கப்பட்டு 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் ஓரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளது.