அரசு மருத்துவமனையிலேயே கொரோனா பரவல்: நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்…4 நாட்களுக்கு மருத்துவமனை மூடல்!!

Author: Aarthi Sivakumar
11 September 2021, 4:32 pm
Quick Share

திருப்பூர்: அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவிநாசி அரசு மருத்துவமனை 4 நாள்களுக்கு மூடப்பட்டது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 3 பேர், மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை இன்று முதல் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பிரதான மருத்துவமனையாக உள்ளதால் ஏராளமானோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். இது தொடர்பாக அவிநாசி சுகாதாரப் பணியாளர்கள் கூறுகையில், “அவிநாசி அரசு மருத்துவமனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் உள்ளனர். தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகள் என, அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, மருத்துவமனை நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது. வரும் 15ம் தேதி முதல் மருத்துவமனை திறக்கப்படும் என்றனர். இதேபோலக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 6க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 3 நாட்கள் மருத்துவமனை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 532

0

0