‘பாரம்பரியமே நம் முழுகவசம்’ : கொரோனாவுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரம்..!

4 September 2020, 12:54 pm
Cbe Sp Velumani Help - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பாரம்பரியமே நம் முழுகவசம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இருப்பினும், கொரோனா பாதிப்பு இன்னும் தீவிரமாக்கத்தான் இருந்து வருகிறது.

ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் எவ்வாறு கட்டுப்பாடுகளுடன் இருந்தனரோ, அதேபோல, தளர்வுகள் அறிவித்துள்ள தற்போதைய காலகட்டத்திலும் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல, அமைச்சர்களும் தங்களின் பங்கிற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒருபடி மேலாக, கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் சமூக வலைதளங்களில் கொரோனாவிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான டிஜிட்டல் விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். பொதுமக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏறபடுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பாரம்பரியமே நம் முழுகவசம் என வீட்டுமுறைப்படியினாலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முறையை பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவிபிடித்தல் அவசியம். பாலில் கலந்து குடித்தால்/தேனுடன் குழைத்து சாப்பிட்டால் சளி/இருமல் குணமாகும். நம் முன்னோர்கள் கண்ட மஞ்சளின் மகிமையை உணர்ந்து வலிமை பெறுவோம், நோய்த்தொற்று எதிரியை வெல்வோம், எனக் குறிப்பிட்டதுடன், #பாரம்பரியமேநம்முழுகவசம் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

Views: - 7

0

0