கோவையில் புதிய உச்சத்தில் கொரோனா : 8 பேர் உயிரிழப்பு
11 August 2020, 8:32 pmகோவை: கோவையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்தை கடந்தது.
கோவை அரசு மருத்துவமனை 23 வயது பெண் அரசு மருத்துவர், 22 வயது பெண் முதுநிலை மருத்துவ மாணவி ஐ.எல்.ஐ. வார்டில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்துள்ளனர். இதில் இவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பணியாற்றிய மற்ற மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர பி.ஆர்.எஸ். குடியிருப்பை சேர்ந்த தலா 19, 45 வயது பெண் காவலர்கள், 33 வயது ஆண் காவலர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர குனியமுத்தூரில் 18 பேர், கணபதியில் 13 பேர், செல்வபுரத்தில் 12 பேர், ரத்தினபுரியில் 11 பேர், உக்கடம், காந்திபுரம், பி.என்.பாளையத்தில் தலா 9 பேர், பீளமேட்டில் 8 பேர் உள்பட 324 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கு முன் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நாளில் 313 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 324 பேருக்க்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கோவையில் இன்று 8 பேர் உயிரிழந்தனர். இதுவரை கோவையில் பலியானவர்கள் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.