வரி வசூல் மையத்தில் லஞ்சம் பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் கைது : கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!!

7 January 2021, 2:39 pm
Cbe Bribery Arrest -Updatenews360
Quick Share

கோவை : சுந்தராபுரம் வரி வசூல் மையத்தில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் 97வது வார்டு மாநகராட்சி வரிவசூல் மையம் உள்ளது. இங்கு சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது புதிய வீட்டுக்கு வரி போடுவதற்காக சென்றார்.

அப்போது அங்கே பணியில் இருந்த மாநகராட்சி வரி வசூல் அலுவலர் கவுஸ் மொய்தீன் (வயது 45) என்பவர் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். செந்தில்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறிய போது, உங்கள் வீட்டில் விதிமுறை மீறல் அதிகமாக இருக்கிறது, அதிக அபராதம் போட வேண்டியிருக்கிறது எனவும் பணம் கொடுத்தால் வரியை குறைத்து போடுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் இன்று முதல்கட்டமாக 18 ஆயிரம் ரூபாயினை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் பில் கலெக்டர் கவுஸ் மொய்தீன், உதவியாளர் தனபால் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கோவை அரசு அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0