பணம் கொண்டு செல்ல விலக்கு: மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை…!!

27 February 2021, 10:22 am
election commision - updatenews360
Quick Share

கோவை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க பணம் கொண்டு செல்ல விலக்கு அளிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளின் படி குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்த நிறுவனங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஊழியர்களுக்கு பணம் கொண்டு செல்லும்போது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

எனவே, ஒப்பந்ததாரர்களின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க பணம் கொண்டு செல்ல விலக்கு அளிக்க வேண்டும். வங்கியில் இருந்து முறையான ஆவணங்களுடன் பணம் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2 கோடி அளவிற்கு பணி செய்யும் ஒப்பந்ததாரர்கள் வாரத்திற்கு ரூ.2 லட்சமும், ஆண்டுக்கு ரூ.5 கோடி அளவில் பணி செய்யும் ஒப்பந்ததாரர்கள் வாரத்திற்கு ரூ.5 லட்சமும், ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒப்பந்ததாரர்கள் ரூ.15 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

ஊதியம் வழங்க காலம் தாழ்த்தினால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். மேலும், பணிகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேர்தல் ஆணையம் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொண்டு செல்வதில் விலக்கு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 10

0

0