ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அமல்: இயல்பு நிலைக்கு திரும்பிய கோவை..!!

Author: Aarthi Sivakumar
28 June 2021, 11:10 am
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நகர பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்து வருகிறது. இதில் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கில் தளர்வுகள் தரப்படாமல் இருந்த நிலையில், இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, கோவை மாநகரில் கடந்த 6 வாரங்களாக அனுமதிக்கப்படாத பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளன. அதன்படி, தேநீர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி உபகரணங்கள் விற்பனையகங்கள், காலணிகள், பேன்சி மற்றும் ஜெராக்ஸ் கடைகள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைகங்கள் இன்று கோவையில் திறக்கப்பட்டு வருகின்றன.

தவிர, செல்போன் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனையகங்கள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் 50 சதவீத பணியாளர்களுடனும் இயங்க உள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் மற்றும் அரசு அலுவலங்கள் திறக்கப்படும் நிலையில் மக்கள் கூட்டம் அலை மோதலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Views: - 217

0

0