என்னது இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசியா…? குறுஞ்செய்தியால் குழம்பிப் போன குடும்பத்தினர்!!
Author: kavin kumar19 January 2022, 8:42 pm
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே 8 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வில்வமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா(72). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தார். அதன் பின்னர் கடந்த மே மாதத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட ராஜப்பாவை, சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், ராஜப்பாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று அவர், மே மாதம் 20-ம் தேதி காலமானார். அவரது இறப்புக்கான சான்றிதழும் விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், (18-ம் தேதி) ராஜப்பா செல்போனுக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்திக்கொண்டதாக அவரது எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. தந்தை செல்போன் எண்ணை பயன்படுத்தி ரெங்கநாத், தந்தை இறந்து சுமார் 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண்ணை கொண்டு விசாரிக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
0