பேரிடர் மீட்பு படையினருக்கு விருந்து படைத்த கடலூர் ஆட்சியர்! (வீடியோ)
28 November 2020, 5:42 pmநாட்டில் உள்ள மக்களின் உயிரை காப்பாற்றுபவர்களில் மருத்துவர்கள் மட்டுமல்ல தீயணைப்புத்துறையினர், பேரிடர் குழு, மீட்பு குழு என்ன அடுக்கிக்கொண்டே போகலாம். பெரும்பாலும் பேரிடர்கள் ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற பேரிடர் குழுவில் இருந்தும் ராணுவத்தில் இருந்தும் வீரர்கள் வருவார்கள், மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுவார்கள்.
மக்களின் உயிரை காக்ககூடிய இடத்தில் உள்ள பேரிடர் குழுவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் கடலுர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி.
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக, பல்வேறு பாதுகாப்பு மையங்களில் அமைக்கப்பட்டு, ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், அப்பொதுமக்களுக்கு மூன்று வேளையும் தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது.
நிவர் புயல் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக கடலூர் மாவட்டத்திற்கு அரக்கோணத்திலிருந்து 142 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர்.
இப்படையினர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடலூரில் 3 குழுக்களும், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் 3 குழுக்களும் முகாமிட்டு பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள தங்கியிருந்தனர்.
இப்படையினரை சிறப்பிக்கும் விதமாக நேற்றிரவு கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தேசிய பேரிடர் மீட்பு படையினருக்குப் பாராட்டு தெரிவித்து, விருந்து அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கமாண்டர் மனோஸ் பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக, உடனே நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.