தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் : அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!!

By: Udayachandran
10 October 2020, 12:52 pm
Insult 1- Updatenews360
Quick Share

கடலூர் : பட்டியலினத்தவர் என்னபதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர். மோகன் என்பவர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள ராஜேஸ்வரி பட்டியலினத்தவர் என்பதால் கடந்த ஜுலை 17ம் தேதி நடந்த ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் உட்கார வைத்து அவமதிப்பு செய்துள்ளனர். இப்படி ஒவ்வொரு கூட்டத்திலும் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான் என தெரியவந்தது. இதையடுத்து துணைத் தலைவர் மோகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். அதே போல இந்த கூட்டம் நடைபெற்ற போது, பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டது குறித்து புகார் அளிக்காத ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தில் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தவிர ஊராட்சி துணை தலைவர், கவுன்சிலர்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்துள்ளனர். பதவியேற்ப்பு விழாவில் கூட தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் அனுசரித்து போனனேன், ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தில் உள்ள அதிகாரிகள் தொல்லை தாங்க முடியாமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாக ராஜேஸ்வரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 51

0

0