தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் இரவு நேர ஊரடங்கு

Author: Udhayakumar Raman
30 November 2021, 10:26 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், புதுச்சேரியில் நவம்பர் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று இரவு முடிவடைந்தது. இதையடுத்து மேலும் சில தளர்வு அளித்து வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், “தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம்.திருமண விழாவுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குக்கு அதிக பட்சம் 20 பேரும் பங்கேற்கலாம். கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதத்துடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 309

0

0