திமுக ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து.. வரும் 2ஆம் தேதி டெல்லியில் புகார் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2021, 3:32 pm
Annamalai - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பாஜகவினரை கங்கணம் கட்டி கைது செய்து வரும் திமுக அரசு, பாஜக பெண் நிர்வாகிககளை இழிவாக பேசும் திமுகவினரை ஏன் கைது செய்யவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக நிர்வாகிகளின் சமுதாய பெரியோர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடந்தது இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த பாஜக மாநில தலைவர்.அண்ணாமலை குமரிமாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டத்தில் கலந்துரையாடினார்.

பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு நாளை டாஸ்மாக் பார்களை திறக்க உள்ளது. ஆனால் ராமேஸ்வரத்தில் இந்துக்களின் புனித நீராடலுக்கு உரிய இருபத்தொரு தீர்த்தங்களை இன்னும் திறக்கவில்லை. இதனை நம்பி 600 குடும்பங்கள் உள்ளன.

அதேபோன்று பாஜகவினரை கங்கணம் கட்டி கைது செய்யும் திமுக அரசு பாரதிய ஜனதா கட்சியின் பெண்களை அவதூறாக பேசும் திமுகவினரை மட்டும் கைது செய்யவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் உடன் வரும் நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்க உள்ளோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. நான்கு வழிச்சாலை பணிகளுக்கு உரிய அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்காததால் காலம் தாழ்ந்து விடுகிறது.

இதேபோன்று நாகர்கோவிலில் அமைய உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 5 ஏக்கர் இடம் வேண்டும் ஆனால் இரண்டரை ஏக்கர் இடம் மட்டும் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது எனவே இந்த மருத்துவமனை அமைவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரத்தில் எந்த தனியார் நிறுவனங்களும் லாபம் பெற துணை நின்றதில்லை. பெட்ரோல் டீசல் வரி மூலமாக கிடைக்கும் தொகையை மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பண்டிகை பொருத்தவரை எல்லா மாநிலங்களுக்கும் பண்டிகை என்பது பாரம்பரியமானது எனவே அனைவரும் தைரியமாக பட்டாசு கொளுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர்.பொன் இராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ, நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம் ஆர் காந்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Views: - 651

0

0