கடலில் மிதந்து வந்த மீனவர் சடலம்.. தத்தளித்த வடமாநில மீனவர் : கரம் கொடுத்து கரை சேர்த்த குமரி மீனவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 7:01 pm
Fisherman Rescue -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி கடலில் புயலில் சிக்கி கடலில் மயங்கிய நிலையில் தத்தளித்த மீனவர் மற்றும் மிதந்து வந்த மீனவர் சடலத்தையும் மீட்டு மும்பை கடலோர காவல் படையினரிடம் குமரி மாவட்ட மீனவர்கள் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், குளச்சல், முட்டம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று சுமார் 7-முதல் 15- நாட்கள் வரை கடலிலேயே தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் இவர்கள் மகாராஷ்டிரா, கர்நாடக, கோவா கடல் பகுதிகளிலேயே மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் அந்த கடல் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கழிந்த 30-ம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி துறைமுகத்திலும் கர்நாடக மாநிலம் மாலத்தி துறைமுகம் மற்றும் கோவா துறைமுகங்களில் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயலில் சிக்கியதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் இன்று காலை ரத்தினகிரி துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் செயின்ட் மைக்கல் என்ற படகில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்த போது கடலில் ஒரு மீனவர் மயக்கமடைந்த நிலையிலும் மற்றொரு மீனவர் சடலமாகவும் மிதந்து வந்த நிலையில் அவர்களை மீட்ட தூத்தூர் மீனவர்கள் மும்பை கைடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியாத நிலையில் மேலும் இதுபோல் படகுகள் சேதமடைந்து மீனவர்கள் கடலில் தத்தளித்து வருகிறார்களா என தூத்தூர் மீனவர்கள் கடலில் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடலில் தத்தளித்த மீனவர் மற்றும் சடலத்தை மீட்டு கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி மீனவர்கள் குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 326

0

0