தீபாவளி ஸ்பெசல் : கரூரில் இருந்து கூரியரில் அமெரிக்காவுக்கு செல்லும் அதிரசம்..பாரம்பரிய பலகாரத்தின் பின்னால் 20 குடும்பங்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2021, 8:22 pm
கரூர் : தீபாவளி பண்டிகையையொட்டி அதிரசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் கரூர் அருகே அதிரசம் தயாரிப்பில் 20 குடும்பங்கள் ஈடுபட்டு வரும் சுவாரஸ்யத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அதுவும் இனிப்பு என்றால் உடனே அந்தந்த மாவட்டங்களின் நினைவுக்கு வரும். குறிப்பாக திருநெல்வேலி என்றால் அல்வா, ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, தூத்துக்குடி என்றால் மக்ரூன், மணப்பாறை என்றால் முருக்கு… இதே போல, கரூர் மாவட்டம், வெள்ளியணை என்றால் அதிரசம் என்ற பெயர் இன்றும் தென் தமிழக அளவில் பெயர் பெற்று தற்போது, இந்திய அளவில் வெள்ளியணை என்றால் அதிரசம் என்ற பெயர் சொல்லும் அளவிற்கு அதிரசம் தயாரிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பகுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிரசம் தயாரிப்பினால் பிழைத்து வருகின்றனர்.
கடந்த 4 தலைமுறைகளாக இந்த அதிரச தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர்கள், இப்பகுதியில் விவசாயம் இல்லை என்பதால் இந்த அதிரசம் தயாரிப்பு தொழிலையே நம்பி நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் 5 அதிரசங்கள் வெறும் 2 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலைவாசி உயர்ந்து வருவதால் காலத்திற்கேற்ப விலை உயர்ந்து தற்போது 5 அதிரசங்கள் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சிங்கப்பூர், அமெரிக்கா, சவுதி வரை செல்லும் இந்த அதிரசங்கள் விமான அஞ்சல் மற்றும் கொரியர் மூலம் அனுப்பட்டு வருகின்றது. தற்போது தீபாவளி வருவதையொட்டி, இந்த அதிரச தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இப்பகுதியில் பெருமளவில் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றது.
ஆங்காங்கே நாகரீகம் என்ற பெயரில் பீட்சா, பர்க்கர் போன்ற பாஸ்ட் புட்டுகளினால் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகிய நோய்கள் உண்டாகி தினந்தோறும் மருத்துவமனைகளை நாடும் மக்கள் மத்தியில் தமிழர்களின் பாரம்பரிய பலகாரம் எனப்படும் இந்த அதிரசம் மன்னர் வகையறாக்களின் முன்னரே அதாவது நரகாசுரன் காலத்திலேயே செய்யப்பட்டு வருவதும், அந்த அதிரசமானது இப்பகுதியில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் பெயர் பெற்றுள்ளது நினைவுக்கூரத்தக்க விஷயமாகும்.
அதிரசம் இல்லாமல் தீபாவளி பலகாரம் முழுமை பெறாது. கரூர் மாவட்டத்தில் இருக்கும் வெள்ளியணை, அதிரசம் தயாரிப்புக்கும் சுவைக்கும் முன்னோடி என்பதும், கரூர் மாவட்ட வாசிகள் மட்டுமல்லாமல், தமிழக அளவில் தற்போது தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, வெள்ளியணை அதிரசத்தை ஆர்டர் செய்து வாங்கிச் செல்கிறார்கள்.
பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில் அமராவதி ஆற்று நீரும் சேர்த்து தயாரிக்கப்படுவதே வெள்ளியணை அதிரசத்தின் தனிச்சுவைக்கான காரணம் என்கின்றனர் அதிரசம் சுவை கொண்டு உண்ணும் மக்கள், இதுமட்டுமில்லாமல்,. இந்த வெள்ளியணை அதிரசம் 50 நாட்கள் வரை சுவை மாறாமல், கெடாமல் இருக்கிறது என்கிறார்கள் ருசி கண்டவர்கள்.
0
0