நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு : இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்…!

Author: kavin kumar
17 February 2022, 11:09 pm
Quick Share

சென்னை : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய்சேதுபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், “பெங்களூரில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு விசாரிக்க முடியாது. கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. எந்திரத்தனமாக இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.

சட்டத்தை மகாகாந்தி தவறாக பயன்படுத்தியுள்ளார். பெங்களூர் போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு, அதை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். மகாகாந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பவம் பெங்களூரில் நடந்தாலும், உடல் காயம் குறித்து சென்னையில் மகாகாந்தி சிகிச்சை பெற்றுள்ளார். அதனால் இங்கு வழக்கு தொடர முடியும்” என்று வாதிட்டார். அப்போது, “பெங்களூரு போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று புகார்தாரர் எழுதி கொடுத்தாரா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர், “பெங்களூரு போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது. அதனால் அவ்வாறு எழுதி கொடுக்கப்பட்டது” என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “கட்டப்பஞ்சாயத்து நடந்திருந்தால், அதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தீர்களா?”என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர், புகார் கொடுக்க வில்லை என்றார். இதையடுத்து, விஜய் சேதுபதி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த மனு மீதான இறுதி விசாரணைக்காக வருகிற மார்ச் 3-ந்தேதிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Views: - 708

0

0