கொரோனா பாதித்த 105 பேருக்கு பிரசவம் : இ.எஸ்.ஐ மருத்துவமனை சாதனை

12 September 2020, 5:54 pm
Cbe ESI - Updatenews360
Quick Share

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பகால கட்டத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கொரோனா மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. தவிர கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக மகப்பேறு பிரிவும், அறுவை சிகிச்சை அரங்கும் அமைக்கப்பட்டது.

இங்கு மகப்பேறு துறைத் தலைவர் மருத்துவர் கீதா தலைமையில் சிறப்பு மருத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டு கர்ப்பிணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். கர்ப்பிணிகளின் நலன் கருதி மகப்பேறு மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பிரசவ வலி ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது. அதன்படி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 105 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பாரக்க்கப்பட்டுள்ளது. இதில் 7 பேருக்கு சுகப்பிரவமும், 98 பேருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 324 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 197 கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, ரத்த சோகை, வலிப்பு, இருதய நோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் இருந்தது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையின் மூலம் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா நோய்த் தொற்றுடன் சிகிச்சைக்கு வந்த 324 கர்ப்பிணிகளில் 105 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இங்கு பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 4 குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருந்தது. இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தாய்மார்களுடன் வீட்டுக்கு திரும்பினர். தவிர பிற மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்த தாய்மார்கள் 76 பேர் கொரோனாவுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 31 தாய்மார்களுக்கு பேறுகால சிக்கலான பிரச்னைகளும், நுரையீரல் பாதிப்புகளும் இருந்தது. மருத்துவக் குழுவின் சிறப்பான சிகிச்சையால் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுடன் தட்டணுக்கள் குறைபாடு, இருதய நோய், வலிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுடன் வந்த கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையால் அனைவரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார்.

Views: - 0

0

0