தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு : பஞ்சாலைகளை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்!!

16 September 2020, 12:42 pm
Cotton Mills Protest - updatenews360
Quick Share

கோவை : கோவையில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறக்கக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சோமசுந்தரம் சாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்டிசி பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனை உடனே திறக்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எஃப், ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் என் டி சி மில் வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு எச்.எம்.எஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், என்.டி.சி-க்கு சொந்தமாக கோவையில் 7 ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரம் பெண்கள் உட்பட 3,500 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்க வேண்டும். மூடப்பட்ட ஆலைகளை உடனே திறக்க வேண்டும்”. என்றனர்.

Views: - 0

0

0