தாராபுரம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி மறுப்பு : சாலையில் வியாபாரம் செய்த விவசாயிகள்!!

17 May 2021, 1:43 pm
Dharapuram Farmers - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி மறுத்ததால் விவசாயிகள் சாலையில் வைத்து வியாபாரம் செய்ததால் காவல்துறையினர் விவசாயிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது அண்ணா நகர். அண்ணாநகர் பகுதியில் உழவர் சந்தை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த விளை பொருள்களை உழவர் சந்தை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

தற்போது கொரோனா தோற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தாராபுரம் பகுதியில் தினந்தோறும் 20 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடுமலை சாலையில் இயங்கி வந்த தினசரி காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு என்சிபி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது இதனை தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் இயங்கிவந்த உழவர் சந்தையும் அருகிலுள்ள என்சிபி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்ய விவசாயிகளுக்கு சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்காத விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்வோம் எனக் கூறி உழவர் சந்தைக்கு வெளியில் இன்று காலை முதல் சாலையோரத்தில் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இதை அறிந்த தாராபுரம் காவல்துறையினர் சாலையில் விற்பனை செய்த விவசாயிகளை மிரட்டும் தொனியில் பேசி கடைகளை அப்புறப்படுத்த கூறினர்.

இதனை ஏற்காத உழவர் சந்தை விவசாயிகள் உழவர் சந்தை முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் என்சிபி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டு செல்ல இயலாது. இதற்கு மாற்று இடமாக விவசாயிகளுக்கு பேருந்து நிலையமும் அல்லது மாற்று இடம் கொடுத்தால் விற்பனை செய்யமுடியும். இல்லை என்றால் இன்று காலை சாலையில் காய்கறிகளை விற்பனை செய்தது போல் தினந்தோறும் தொடரும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 112

0

0