கனமழையால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சதுரகிரி மலைக்கு செல்ல தடை…பக்தர்கள் ஏமாற்றம்..!!

9 July 2021, 11:40 am
Quick Share

வத்திராயிருப்பு: சதுரகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, சதுரகிரி வனப்பகுதியில் கன மழை பெய்தது.

இதையடுத்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் திரண்டனர்.

போலீசார் மற்றும் வனத்துறையினர் மலைப்பகுதியில் நீர் வரத்தை நேற்று காலை ஆய்வு செய்தனர். வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சுந்தரமகாலிங்கம் சாமி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, வனச்சரக அலுவலர் செல்லமணி ஆகியோர் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் திரண்டிருந்த 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மழை தொடர்ந்து பெய்தால், வரும் நாட்களிலும் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்க முடியாது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Views: - 82

0

0