தடையை மீறி காரமடை கோவிலில் குவிந்த பக்தர்கள் : தொற்று பரவும் அபாயம்!!

By: Udayachandran
3 October 2020, 1:14 pm
Karmaadai Kovil - updatenews360
Quick Share

கோவை : தடையை மீறி காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் என்பதால் காரமடை அரங்கநாதர் கோவிலில் 3வது சனிக்கிழமை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்திருந்தார்.

கோவில் நிர்வாகமும் பக்தர்கள் வர அனுமதி இல்லை என தகவல் வெளியிட்டு கோவில் முன்பு அறிவிப்பு பலகை வைத்தது. இந்நிலையில் புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றதால் தடையை மீறி சாமி தரிசனம் செய்வதற்காக அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் ஏராளமாக குவிந்தனர்.

இதனால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு விட்டு முண்டி அடித்து கொண்டு கோவில் முன்பு குவிந்தனர். கோவில் அருகே இருந்த தாசர்களுக்கு அரிசி படி வழங்கி வழிபாட்டை நிறைவு செய்தனர். பக்தர்கள் கூடியதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். ஒலிபெருக்கி மூலம் அங்கிருந்து செல்லும் படி அறிவுறுத்தப்பட்டது.

கோவிலுக்கு பக்தர்கள் வர கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அதற்கானதக்க நடவடிக்கையை முன்பே பேரூராட்சி நிர்வாகம் எடுக்காததால் பக்தர்கள் படையெடுத்து கொண்டு கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் நோய் தொற்று வேகமாக அதிகரிக்க கூடும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Views: - 56

0

0