டிஜிபி ராஜேஸ்தாஸ் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் : எம்பி கனிமொழி வலியுறுத்தல்!!

1 March 2021, 4:34 pm
Kanimozhi Minister - Updatenews360
Quick Share

சென்னை : டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த 21ம் தேதி திருச்சி, புதுக்கோட்டைக்கு சென்றிருந்த டிஜிபி ராஜேஷ்தாஸ், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்தப் பெண் அதிகாரி டிஜிபி ஜே.கே. திரிபாதி, உள்துறை கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே. பிரபாகரிடம் கடந்த 23ம் தேதி புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிடிருந்தார். அதோடு, டிஜிபி திரிபாதி விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், புகாரை விசாரணை செய்யும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார். பின்னர், சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு என்பதால் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக,ஏ.டி.எஸ்.பி.கோமதிக்கு பதில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “டிஜிபி மீதான பாலியல் வழக்கை சுதந்தரமாகவும், நேர்மையாகவும் நடத்த சிபிஐக்கு மாற்ற வேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்வது மட்டுமல்லாமல், அவர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கு மிரட்டல்கள் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது கேவலமானது,” என்றார்.

Views: - 9

0

0