மூச்சுத்திணறலால் பாதிக்கபட்டவருக்கு சிகிச்சை அளிக்க முன்வராத மருத்துவர்கள்: ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த முதியவர்…

25 August 2020, 9:15 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத்திணறலால் பாதிக்கபட்டவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் முன்வராததால் சுமார் 1 அரை மணி நேரமாக காக்கவைக்கபட்டவர் ஆம்புலன்ஸ்லேயே உயரிழந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈ.பி. காலனியை சேர்ந்த 72 வயதான தேவேந்திரன் என்பவர் கடந்த சில தினங்களாக மூச்சுத்திணறலால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட வந்த நிலையில் இன்று மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் சிகிச்சைக்காக அவரை ஓசூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருக்கலாம் என்பதால் தங்கள் மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க இயலாது என்றும்,

அதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியதை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ்சில் தேவேந்திரனை அவரது மனைவி ராணியுடன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளி தேவேந்திரனுடன் எந்த ஆண்களும் யாரும் உடன் வராததாலும் ஆண்கள் இருந்தால் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கபடுவார் என்றும் கூறிய மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக உள்ளே அனுமதிக்கவில்லை. இதை அறிந்த அவரது உறவினர்கள் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் அலைக்கழிக்கபட்டனர்.

இந்நிலையில் எந்த மருத்துவரும் அவருக்கு சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில் சுமார் 1 அரை மணி நேரம் மருத்துமனை வளாகத்திலேயே ஆம்புலன்ஸ்சில் காத்திருந்த தேவேந்திரன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரனின் உறவினர்கள் தேவேந்திரன் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகாத்தின் அலட்சிய போக்கின் காரணமாகவே உயிரிழந்தார் என்றும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 25

0

0