கடன் வாங்கிவிட்டு தந்தை இறந்துவிட்டார்.. நிதி நிறுவனத்தினர் எங்களை துன்புறுத்துகின்றனர் : கல்லூரி மாணவி கண்ணீர் மல்க புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 12:15 pm
College Student - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தந்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிவிட்டு உயிரிழந்துவிட்ட சூழலில், கல்லூரியில் படித்து வரும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் நிதி நிறுவனத்தினர் மிரட்டி, தகாத வார்த்தைகளில் பேசி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியில் உள்ள தனது வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடனை தங்கராஜ் மற்றும் அவரது தாய் குஞ்சம்மாள் ஆகியோர் செலுத்தி வந்த நிலையில், குஞ்சம்மாள் இறந்துவிட்டார். இந்த சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் தங்கராஜூம் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

தொடர்ந்து அவரது மகளும் கல்லூரி மாணவியுமான ராம்பிரபா பகுதி நேர வேலைக்கு சென்று கடனை சிறுக சிறுக திருப்பிச் செலுத்தி வந்தார். கல்லூரி படிக்கும் தன்னால் விரைவாக பணத்தை செலுத்த முடியவில்லை என்றும் அவகாசம் வேண்டும் என்றும் நிதி நிறுவனத்தாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் மாணவியையும், பள்ளியில் படிக்கும் சகோதரிகளையும், அவரது தாயையும் மிரட்டி தகாத வார்த்தையில் பேசுவதாக மாணவி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

இதுகுறித்து மாணவி கூறுகையில், “கோவையில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வாங்கிய கடனுக்காக எனது தந்தையும், பாட்டியும் இறந்த பிறகு பகுதி நேர வேலைக்கு சென்று ரூ.23 ஆயிரம் செலுத்தினேன். ஆனாலும், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டுகின்றனர். தகாத முறையில் பேசுகின்றனர். இதனால் தற்கொலைக்கும் முயன்றுவிட்டேன்.

ரூ.3 லட்சம் கடன் வாங்கியதற்கு ரூ.6 லட்சம் கேட்கின்றனர். இல்லையென்றால் வீட்டை பூட்டி சீல் வைப்போம் என்கின்றனர். மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் எனது 3 தங்கைகளையும் வைத்துக் கொண்டு என்னால் உடனடியாக கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Views: - 567

0

0