பழனியில் எகிறிய டீசல் விலை : 100 ரூபாயை தாண்டியதால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கொந்தளிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2021, 1:19 pm
திண்டுக்கல் : பழனியில் டீசல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது வாடகை வாகன ஓட்டுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இருப்பினும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டீசல் விலை 100ரூபாயை தாண்டி ஒருலிட்டர் விலை 100ரூபாய் 12பைசாவிற்கு விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் வாடகை வாகன ஓட்டுனர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால் வாடகை வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டீசல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது கவலையாக உள்ளது.
இதனால் முன்னதாக பேசி வைத்திருக்கும் வாடகையில் நஷ்டம் ஏற்படும் என்றும், திமுக அரசு பெட்ரோல்,டீசல் விலையை குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில் பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துள்ளது. எனவே, தற்போது டீசலுக்கான 3 ரூபாயை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.
0
0