ரசீது போட்டு ஊழல்? படம் போட்டு காட்டிய பாஜக உறுப்பினர்!

Author: Hariharasudhan
17 October 2024, 4:57 pm

திண்டுக்கல் மாநகராட்சியில் அனைவரும் ரசீது போட்டு ஊழல் செய்து வருவதாகவும், பாதாளச் சாக்கடை பணிகளை பல மாதங்களாக முடிக்கவில்லை என்றும் பாஜக மாமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மாநகராட்சி மேயர் தலைமையில் இன்று (அக்.17) மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

இவ்வாறு, அத்தீர்மானங்கள் அறிவிப்பு வெளியானபோது, திண்டுக்கல் மாநகராட்சியின் 14வது மாமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், தனது 14வது வார்டு பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக பாதாளச் சாக்கடை தொட்டி கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர், அதிகாரிகள் என யாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

அது மட்டுல்லாமல், தான் கொண்டு வந்த லேப்டாப்பில் உள்ள படங்களையும் அவர் காண்பித்தார். அப்போது, எங்கள் பகுதி குண்டும் குழியுமான சாலைகளால் உள்ளது, பாதாளச் சாக்கடை தொட்டி அமைக்காததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்கிறது.

ஆனால், தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகளும், மாமன்ற மேயரும் கண்டுகொள்ளவில்லை என பகிரங்கமாக கூறினார். இதனால் திமுக உறுப்பினர்களுக்கும், பாஜக 14வது வார்டு உறுப்பினர் தனபாலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், தனது பகுதியில் உள்ள பிரச்னைகளை கோஷமாகவும் எழுப்பத் துவங்கியதால், மாமன்றக் கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. மாமன்றக் கூட்டத்தில் சரியான பதில் தரவில்லை, முறையான மரியாதை இல்லை எனக் கூறி அவர் வெளிநடப்பு செய்தார்.

இதையும் படிங்க: பங்கம் செய்யும் பாஜக…பாராட்டும் ஆளுநர்…தமிழக அரசியலில் என்ன நடக்குது?

இதனையடுத்து வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திண்டுக்கல் மாநகராட்சியில் ஊழல் அதிகமாக உள்ளது. இதில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் தலையிட வேண்டும். ஏற்கனவே நான்கரை கோடி ஊழல் நடந்துள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து, தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் அப்படியே உள்ளது.

BJP Member

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் மாநகராட்சி பதிவுகளை பதிவு செய்வதற்கு, வருடத்திற்கு ரூபாய் 12 லட்சமா? மாநகராட்சி பணி செய்பவர்களுக்கே சம்பளம் வழங்காத மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு பணிகளை செய்ததாகக் கூறி ரசீதுகளை மட்டும் போட்டு லட்சம் லட்சமாக ஊழல் செய்து வருகிறது.

நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாருகிறோம் என்று 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

ஆனால், எங்களது பகுதியில் வந்து பாருங்கள், இரண்டடி கழிவு நீர் வாய்க்காலில் முழுவதுமாக மண்மூடி மழை பெய்தால் கழிவு நீரும், தண்ணீரும் சாலையில் செல்லும் அவல நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்ட அனைவரும் ரசீது போட்டு ஊழல் மட்டும் செய்து வருகின்றனர்” எனக் குற்றம் சாட்டினார்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 160

    0

    0