திண்டுக்கல்லில் திகிலூட்டிய பர்னிச்சர் கடை உரிமையாளர் கொலை வழக்கு : கைதான 8 பேர் பரபரப்பு வாக்குமூலம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2021, 6:12 pm
திண்டுக்கல் : பர்னிச்சர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் எருமைக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மணிகண்டன் கடையில் இருந்தார். அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட மர்மகும்பல் வந்தனர். பின்னர் கடைக்குள் புகுந்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கண்ணிமைக்கும் நேரத்தில், கடையில் இருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் உயிருக்கு போராடிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனின் கடையில் வேலை பார்த்த பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் சுந்தர பாண்டியன் (வயது 39), சத்திய கீர்த்தி (வயது 29) ஆகியோர் தங்களின் உறவினர்கள் 6 பேருடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களின் செல்போன் எண்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்திய போது, 8 பேரும் பழனி பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சுந்தரபாண்டியன் உள்பட 8 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் கொலைக்கு மூளையாக செயல்பட்ட சுந்தரபாண்டியனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது தந்தை பெருமாள் மணிகண்டனின் கடையில் வேலை பார்த்தார். அவருக்கு வயது மூப்பு ஏற்பட்டதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு மணிகண்டன் நிறுத்தினார். அப்போது எனது தந்தையிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தார்.
10 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வேலை பார்த்த தந்தைக்கு அவர் கொடுத்த தொகை குறைவு ஆகும். இதனால் நானும் எனது தம்பியும் அவரிடம் இது குறித்து கேட்டோம். அப்போது எனது தந்தைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் அல்லது கடையில் ஒரு பங்குதாரராக அவரையோ அல்லது எங்களையோ சேர்க்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
இதனால் கடந்த சில மாதங்களாக எங்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் தான் பணத்தை கொடுக்காத மணிகண்டனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி நேற்று முன்தினம் எங்களின் உறவினர்களான திண்டுக்கல் சிலுவத்தூரை சேர்ந்த சின்னையா (வயது 29), பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பாண்டி (வயது 29), அன்பழகன் (வயது 20), பெருமாள் (வயது 23), நல்லாம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 35), பஞ்சம்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 24) ஆகியோருடன் மோட்டார் சைக்கிள்களில் மணிகண்டனின் கடைக்கு சென்றோம்.
பின்னர் நாங்கள் கொண்டு சென்ற கத்தி, அரிவாளால் அவருடைய தலையில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச்சென்றோம். பின்னர் பழனி பை-பாஸ் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
பணப்பிரச்சினை தொடர்பாக நடந்த இந்த கொலை திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்த 24 மணி நேரத்துக்குள் போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..
0
0