பந்தய குதிரையில் சிட்டாய் பறக்கும் சிறுவன்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சாகச வீரன்!
7 August 2020, 6:19 pmதிண்டுக்கல் : நத்தம் அருகே பந்தய குதிரையில் சிட்டாய் பறந்து வரும் சிறுவனின் சாகச செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கோபால் பட்டி அருகே உள்ள அய்யா பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் நந்தகுமார். அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன் நந்தகுமார் ,தனக்கு 5 வயதாக இருக்கும் பொழுது தனது தந்தை கார்த்திகேயனிடம் குதிரை வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்துள்ளான்.
மகனின் மேல் இருந்த அதீத பாசத்தின் காரணமாக பந்தய குதிரை ஒன்றை வாங்கி வீட்டில் கட்டியுள்ளார் கார்த்திகேயன். அதன்பின்னர் அந்த தொழிலில் லாபம் கிடைக்கவே பந்தய குதிரைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்ய தொடங்கினார்.
இதன் காரணமாக கார்த்திகேயன் வீட்டு வாசலில் எப்போதும் இரண்டு குதிரைகள் கட்டிக் கிடக்கும். வீட்டில் குதிரை இருந்த காரணத்தினால் ஏற்கனவே குதிரை ஏற்றத்தில் ஆர்வம் கொண்ட சிறுவன் நந்தகுமார் குதிரையில் அமர்ந்து கொண்டு கிராமத்தை சுற்றி வர ஆரம்பித்தான்.
இதற்கிடையே நாளடைவில் குதிரை விற்பனை தொழில் மந்தம் அடையவே அந்த தொழிலை விட்டுவிட்டு சிறுவனின் தந்தை கார்த்திகேயன் கார் ஒன்றினை வாங்கி வாடகைக்கு ஓட்ட ஆரம்பித்தார். இருப்பினும் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நிரந்தரமாக குதிரை ஒன்றினை வாங்கி வீட்டில் வளர்த்து வருகிறார்.
பள்ளி வயதை நெருங்கிய சிறுவன் நந்தகுமார் நாள்தோறும் பள்ளிக்கு குதிரையிலே செல்ல ஆரம்பித்தான். குதிரை ஓட்டுவதில் இருந்த ஆர்வத்தின் காரணமாக அதனை லாவகமாக ஓட்டி போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டான்.
சிறுவன் நந்த குமார் தனது 8 வயதில் கேரளாவில் நடந்த முதல் போட்டியில் மூன்றாவது பரிசினை பெற்றான். தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டில் இருக்கும் சிறுவன் நந்தகுமார் காலை மாலை இருவேளையும் கிராமப்பகுதியில் உள்ள சாலைகளில் தனது குதிரையில் புயல் வேகத்தில் சுற்றி வருகிறான்.
தினந்தோறும் குதிரைக்கு உணவு வழங்குவது அதனை சுத்தம் செய்வது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து பராமரிப்பு பணிகளையும் தன்னந்தனியே செய்து வருகிறான். மேலும் தனது தங்கை மற்றும் நண்பர்களுக்கும் குதிரை ஏற்றத்தை சொல்லித்தரும் நந்தகுமார் தனது லட்சியமாக பெரிய குதிரையேற்ற வீரராக வேண்டுமென்பது தனது கனவாக உள்ளதாக கூறுகிறார்.
இந்த ஊரடங்கில் மாணவனின் தந்தை கார்த்திகேயன் பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் போதிலும், தனது மகன் பிற்காலத்தில் சிறந்த குதிரை ஏற்ற வீரனாக வருவான் என்ற நம்பிக்கையில், தினந்தோறும் குதிரைக்கு தேவையான சத்தான உணவு மற்றும் மருந்து வகைகளுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை நாள் தோறும் செலவு செய்து வருகிறார். இந்த தந்தையின் நம்பிக்கை ஒருபோதும் வீனாகி போகாது.