காதலித்து ஏமாற்றியதால் பெண் தீக்குளித்து தற்கொலை : காப்பாற்றாமல் வீடியோ எடுத்த காதலனின் சகோதரர் கைது..!

2 September 2020, 11:18 am
dgl-suicide-updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள கே.சி. பட்டியை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி (28). இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளாக தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் சதீஷ் என்பவருடன் மாலதி பழகி வந்துள்ளார். ஓட்டுநர் வேலை செய்து வரும் சதீஷ், மாலதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய காரணத்தினால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இரு வீட்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். மாலதி தனது ஆண் குழந்தையை தனது கண்காணிப்பில் வைத்திருந்தார்.

இதற்கிடையே டிரைவர் சதீஷ்ற்கு பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலதி, கே சி பட்டியில் உள்ள சதீஷின் வீட்டிற்கு தனது குழந்தையுடன் சென்ற மாலதி, வீட்டு வாசலில் முன்பு அமர்ந்து நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால், சதீஷின் பெற்றோர் மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர். இதனால், மனவேதனை அடைந்த மாலதி தன்னுடைய ஆண் குழந்தையை அருகில் உள்ள கடை ஒன்றில் அமர வைத்துவிட்டு, பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மாலதியின் தற்கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். யாரும் தடுக்காததால், தீயினால் உடல் கருகி மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தாண்டிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பரப்பிய சரவணக்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் சரவணக்குமார், மாலதியை ஏமாற்றிய சதஷீன் சகோதரர் என்பது தெரிய வந்துள்ளது.

Views: - 0

0

0