கவச உடையில் நோயாளிகளை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்: பணியில் சேர்ந்த உடனேயே கொரோனா வார்டில் திடீர் ஆய்வு

16 June 2021, 11:05 pm
Quick Share

கரூர்: கரூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற பிரபுசங்கர் கவச உடையில் நோயாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிரபுசங்கர், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில், அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளது, இதில் எத்தனை படிக்கை வசதிகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது, ஆக்சிஜன் செறிவூட்டிகள் மொத்தம் எத்தனை வைக்கப்பட்டுள்ளது, அவைகள், சரியாக இயங்குகின்றனவா என்பது குறித்தும், கொரோனா தொற்றாளர்களுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் இதுவரை எத்தனை நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்துள்ளனர்.

தற்போது எத்தனை நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு எத்தனை ஸ்வாப் டெஸ்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வசதி உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மொத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு, கூடுதல் வசதிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா என்பது குறித்தும் கரூர் கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அவரே கவச உடை அணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

அடிப்படையில் தானும் ஒரு மருத்துவர் என்ற காரணத்தால் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்த நிலையிலும் கவச உடை அணிந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள திரவஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு வசதியினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Views: - 150

0

0