இலங்கை வசமுள்ள 121 தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!!

9 November 2020, 5:46 pm
Vijayakanth- updatenews360
Quick Share

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல்‌ செய்யப்பட்ட 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம்‌ ஆணையிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்களிடம்‌ இருந்து பறிமுதல்‌ செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில்‌ நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள்‌ ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக மீனவர்களின்‌ படகுகளை அழிக்க வழங்கிய இந்த தீர்ப்பு சரியானது அல்ல. மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தை அழிக்கும்‌ இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று, இரு நாட்டு மீனவர்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த
இது வழிவகை செய்யும்‌. மேலும்‌ படகுகளை நம்பி வாழக்கூடிய மீனவர்கள்‌ பெரிதும்‌ இன்னல்களுக்கு ஆளாகும்‌ நிலை ஏற்படும்‌. இது இரு நாட்டுடைய நட்பையும்‌ கேள்விக்குறியாக்கும்‌.

எனவே, இதில்‌ மத்திய, மாநில அரசுகள்‌ தலையிட்டு மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தை காத்திட நல்ல தீர்ப்பு வழங்கி, தமிழக மீனவர்களின்‌ படகுகளை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 34

0

0