காட்பாடி பாலத்தால் திமுக – அதிமுக மோதல் : அதிமுக மா.செ.,வை கைது செய்த போலீஸ்.. அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு… வாக்குவாதத்தால் பரபரப்பு.. பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 10:15 pm
Admk Executive Arrest 1 -Updatenews360
Quick Share

சீரமைக்கப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்புவை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த மாதம் ஒன்றாம் தேதி போக்குவரத்து தடை செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்து இன்று இருசக்கர வாகனங்கள் மட்டும் மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேம்பால பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்றும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு மேம்பாலத்தில் தொண்டர்களுடன் வந்து ரிப்பன் வெட்டி மேம்பாலத்தை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்தாக வந்த திமுகவினர் அதிமுகவினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

பின்பு அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மேம்பாலத்தை ஆய்வு செய்தார். இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் இது போல் நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்து சென்றார்

இந்த நிலையில் மாலையில் காட்பாடி செங்குட்டை பகுதியில் உள்ள அப்புவின் வீட்டின் முன்பு போலீசார் குவிந்தனர். தகவல் அறிந்து அதிமுகவினரும் அங்கு வந்தனர்.

வீட்டினில் சென்ற காவல்துறையினர் அப்புவை கைது செய்ய முயன்றனர். அப்போது அப்புவை கைத செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற போது அவரை மடக்கி தடுத்து நிறுத்தினார்கள். அதனால் அங்கு மேலும் பதற்றம் ஏற்பட்டது.

அப்பகுதியில் குவிந்த 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திமுக அரசியல் கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் முன்னாள் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அப்புவின் வீட்டிற்கு தொண்டர்களுடன் வந்து சென்றார். அதனால் மேலும் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் அப்பு தன் வீட்டு மாடியில் இருந்து அதிமுக வாழ்க என கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தார். அவரை காவல்துறையினர் கீழே அழைத்து வந்து கைது செய்ய முயன்றனர். அப்போது தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மாவட்ட செயலாளர் அப்பு மற்றும் பகுதி செயலாளர் ஜனார்தனன் ஆகிய இருவர் மீதும் தலா 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் இரண்டு கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்ப்பட்டு உள்ளது.

அவரை கைது செய்யக் கூடாது என தடுத்த தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அனைவரையும் துரத்தி தள்ளிவிட்டு காவல்துறையினர் அப்புவை கைது செய்து காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Views: - 759

0

0