முதல் கவுன்சிலர்கள் கூட்டத்திலேயே திமுக – அதிமுக மோதல்… சட்டசபை போல காட்சியளித்த மாமன்றம் : அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 2:35 pm
Councilor Meeting Admk Oppose-Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான முதல் கூட்டத்திலேயே திமுக மற்றும்அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் தங்களது மண்டலம் மற்றும் வார்டுகள் அளவிலான குறைகள் குறித்து மாமன்றத்தில் பேசினார்கள்.

அப்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கோவை மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சினைகளுக்கு அதிமுக அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு குறுக்கிட்ட 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டரங்கில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில, குப்பைகளை அள்ள சிறுசிறு வாகனங்கள் வருகின்றது. இதனால் குப்பை தேக்கம் அடைகிறது. சிறு சிறு வாகனங்களுக்கு பதிலாக ஒரு டிப்பர் லாரி கொண்டு வந்தால் 4 வாகனங்களில் அள்ளக்கூடிய குப்பையானது ஒரே வாகனத்தில் அள்ளி செல்லப்படும்.

மேலும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. சென்னையில் வார்டு கவுன்சிலர்களுக்கு ரூ. 30 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல் கோவையிலும் ஒதுக்க வேண்டும் என கோரினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தமிழக அரசின் அரசாணையின்படி கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். உங்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றார்.

தொடந்து பேசிய கவுன்சிலர்கள் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். குப்பைகள் தேங்காமல் அகற்றப்பட வேண்டும். குப்பைகளை கொண்டு செல்ல புதிய வாகனங்களை வாங்க வேண்டும். புதிய குப்பை தொட்டிகள் வாங்க வேண்டும்.

சாக்கடைகளில் அடைப்பு இல்லாமல் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்களை கொடுக்க வேண்டும். சாலை வசதிகளை என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் கல்பனா, மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், என்றார். 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் பேசிய போது கடந்த 10 மாதங்களாக மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எதுமே பராமரிக்கப்படவில்லை. கடந்த 10 மாதங்களாக தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. திமுக ஆட்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். தவறான தகவலை தர வேண்டாம் என பேசினார்.

இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் பிரகாரனுக்கும் திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கவுன்சிலர்களை சமாதானம் செய்தனர்.

இக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 15 வது ஒன்றிய நிதி ஆணையம் 2022- 2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் பெறுவதற்கு மொத்த ஆண்டு மதிப்பில் சொத்து வரி விகிதம் எவ்வளவு என அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி வசூலில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் 2.0, அம்ரூட் திட்டம் 2.0 ஆகிய திட்டங்களுக்கு நிதி பெறுவதற்கு சொத்து வரி உயர்த்துவது அவசியமாகிறது. எனவே மாநகராட்சி சொத்துவரி சீராய்வு செய்வதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி ஏற்றப்பட்டுள்ளது என்றனர்.

Views: - 790

0

0