உள்ளாட்சி தேர்தலுக்கு கவர்ச்சிகர திட்டத்தை அறிவிக்கும் திமுக : அப்போ சட்டமன்ற தேர்தல்ல அறிவிச்சது???

Author: Udayachandran
31 July 2021, 1:31 pm
Cbe Dmk 1- Updatenews360
Quick Share

கோவை : உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் இதற்காக கவர்ச்சிகர திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி திரட்டப்பட்டு முதற்கட்டமாக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கோவை வந்துள்ளன.

இந்த சூழலில், கோவையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் சக்கரபாணி இன்று பி.எஸ்.ஜி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி கொடுத்தாலும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சி.எஸ்.ஆர் நிதி மூலம் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் கோவை மாவட்டத்தில் அதிக நிதி மூலம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

கோவையில் 11 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களை விட 20 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று அதிகரித்துள்ளது.

தொற்றை குறைக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை- கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆய்வு பணிகளுக்காக அமைச்சர்கள் வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் கோவை வந்து ஆய்வு செய்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்றவர் முதலமைச்சர்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இது வெளிப்படும். கோவையில் வெற்றி பெறுவோம். இதற்காக கவர்ச்சிகளை திட்டங்களை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்க தவறிவிட்டதாக புகார் எழுந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக கவர்ச்சிகர திட்டம் அறிவிக்கும் என அமைச்சர் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

Views: - 165

0

0