நீட் பற்றி பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதை இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டம்..!

14 September 2020, 2:18 pm
Quick Share

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற மு.க ஸ்டாலின் கருத்து குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது. இந்த சூழலில், 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று திட்டமிட்டபடி நடந்தது. முன்னதாக தேர்வின் மீது ஏற்பட்ட அச்சத்தால் நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியபோது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார். இதேபோல், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்த வித சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டாவது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர்களின் கருத்துக்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு பற்றி பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதை இல்லை என கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் இவ்விரு கட்சிகளும் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கின்ற செயலை செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Views: - 4

0

0