போலியோ சொட்டு மருந்து முகாமில் விளம்பரம் தேடிய திமுக கவுன்சிலர்கள் : முகத்தை காட்ட போட்டா போட்டி…. கைகலப்பாக மாறியதால் பரபரப்பு!!!

Author: kavin kumar
27 February 2022, 2:52 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் இல்ல போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் 1569 முகாம்களில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 146 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இம்முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 247 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த துவக்க விழா நிகழ்ச்சி திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, 54 வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ், மற்றும் 55வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர்.

இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் தங்கள் முகத்தை காட்ட வேண்டும் என்பதால் யார் முன்னே நிற்பது என்ற தகராறு இவர்களுடையே ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் சிவராசா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனை தொடர்ந்து வாய்த்தகராறு முற்றி திமுக கவுன்சிலர்களான புஷ்பராஜ் மற்றும் ராமதாஸ் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக, அவர்களது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.திருச்சி மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருகிற 2ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அதிகாரம் கைக்கு வரும் முன்னே திருச்சியில் திமுக கவுன்சிலர்கள் அடாவடியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Views: - 856

0

0