திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்.. ஓய்வெடுத்த போது உயிர் பிரிந்தது : அஞ்சலி செலுத்த முதலமைச்சர் வருகை!
Author: Udayachandran RadhaKrishnan18 செப்டம்பர் 2024, 6:00 மணி
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம்6 உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார்.
மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை த பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
கடந்த1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சராகவும், 1996 – 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான திமுக துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு திமுக அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், க.சுந்தரத்திற்கு ஆதிதிராவிட நலக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
கட்சியில் கடுமையாக உழைத்த சுந்தரத்தை பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருதினை அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
க.சுந்தரம் மறைவுக்கு திமுக கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது இல்லத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று சுந்தரம் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்
0
0