நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 கோடி மோசடி.. திமுக பிரமுகர் உள்பட 2 பேர் தலைமறைவு ; பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!

Author: Babu Lakshmanan
2 March 2023, 8:31 am
Quick Share

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரத்தில் மீண்டும் ஐஎப்எஸ், ஆருத்ரா போல் டே பை டே என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 25 கோடிக்கு மேல் மோசடி செய்த திமுக பிரமுகர் உட்பட இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள பங்காரு அம்மன் தோட்டம் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பிரமுகர் வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர் இணைந்து டே பை டே என்ற நிதி நிறுவனத்தைத் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கினர். ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

இதில் ஒரு லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நாள்தோறும் 1500 ரூபாய் வீதம் 200 நாட்கள் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு நாள்தோறும் 500 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர் மற்றும் அறிமுகப்படுத்தும் நபருக்கு இரண்டு கிராம் தங்க நாணயமும் வழங்கியுள்ளனர்.

இத்தகவல் மெல்ல மெல்ல பரவி காஞ்சிபுரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிறுவனத்தில் சுமார் 25 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு துவங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை இரு தரப்பினருக்கும் பணமும், கமிஷனும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலீட்டாளரின் வங்கி எண்ணிற்கும், முகவரின் வங்கி எண்ணிற்கும் நேரடியாக இந்நிறுவனம் பணம் செலுத்தியுள்ளதாக முதலீட்டாளர் கூறிய நிலையில், கடந்த ஆறு மாத காலமாக பணம் தராமல் காலம் தாழ்த்தியும், அதற்கான பல்வேறு காரணங்களும் கூறிய நிலையில், திடீரென தற்போது அனைவரும் தலைமறைவாகிவிட்டதாகவும் முதலீட்டார்கள் கூறுகின்றனர்.

பணத்தை டெபாசிட் செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர்களின் இல்லங்களுக்கும், நிதி நிறுவனம் நடந்த அலுவலகத்துக்கும் சென்றனர். வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகியோர்களின் குடும்பத்தினர் சரியான பதில் அளிக்காததால் தங்களது முதலீட்டு பணத்தை மீட்டுத் தரக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முதலீட்டாளர்களில் ஒருவர் கூறுகையில் , அதிக வட்டி தரும் கவர்ச்சிகரமான திட்டங்களை தெரிவித்ததால் அவர்களிடம் ரூபாய் 8 இலட்சம் வரை முதலீடு செய்தேன். பின்பு என் உறவினர்கள் என் நண்பர்கள் என சுமார் 60 இலட்சம் வரை இவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது . இதில் சுமார் ரூபாய் 20 இலட்சம் வரை திருப்பி தந்தார்கள். இன்னும் 40 இலட்சம் ரூபாய் தர வேண்டும். இவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு நிலை மறைவாகி விட்டார்கள் என்பது அதன் பிறகு தான் தெரியவந்தது.

என்னைப் போன்று பல முதலீட்டாளர்களை அவர்கள் ஏமாற்றி சுமார் 25 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்கள் . எனவே என்னைப் போன்று பல பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம், என கண்ணீருடன் புலம்பினார்.

இதுபோன்ற நிதி நிறுவனங்கள் ஏமாற்றிக் கொண்ட செல்வதை முழுமையாக அறிந்தும், தெரிந்தும் கூட மீண்டும் மீண்டும் பல முதலீட்டு ஏமாளிகள் பணத்தை முதலீடு செய்வது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

Views: - 389

0

0